tnkalvi news | லேப்-டாப் வினியோகத்தில் கல்வித்துறை மவுனம்! சுயநிதி பிரிவு மாணவர்கள் புறக்கணிப்பு?

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலுள்ள பிளஸ் 2சுயநிதிப்பிரிவு மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், பெற்றோரிடையேஅதிருப்தி நிலவுகிறது.


கடந்த, 2011ம் ஆண்டு முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான முன்னர், ஓரிரு மாதங்களில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அவை வழங்கப் படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில், 96 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இதில் பல பள்ளிகளில், சுயநிதி பிரிவின் அடிப்படையில், கலை பாடப்பிரிவுகள் நடத்தப்படுகிறது.

இவ்வாறு செயல்படும் பிரிவுகளுக்கு, ஆசிரியர்கள் நியமிப்பது உட்பட சில திட்டங்களை, பள்ளி நிர்வாகம் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது. இம்மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்ட நலத்திட்டங்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில், இலவச லேப்-டாப்களும் கடந்தாண்டு வரை, மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், அனைத்து பிளஸ், 2 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது.

நடப்பாண்டிற்கான லேப்-டாப்களும் ஒவ்வொரு பள்ளியாக வழங்கப்பட்டு வருகின்றன.

கோவை தணிக்கை குழுவின் சார்பில், இம்மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் நடந்த ஆய்வுகளில், இவ்வாறு சுயநிதி பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படுவது நிர்வாக ரீதியாக தவறு என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மற்ற பள்ளிகளிலும், இப்பிரிவு மாணவர்களுக்கு லேப்-டாப்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிளஸ், 2 முடித்த மாணவர்கள் பலரும், அரசின் சார்பில் வழங்கப்படும் இந்த லேப்-டாப்கள் நம்பியே உயர்கல்வியில் கம்ப்யூட்டர் துறையை தேர்ந்தெடுக்கின்றனர்.

கம்ப்யூட்டர் பிரிவு மட்டுமின்றி, பல்வேறு துறைகளுக்கு லேப்-டாப்கள் அவசியமாகவும் உள்ளது. மாணவர்கள் இதனால் பயனடைந்தும் வருகின்றனர்.

தற்போது திடீரென இவ்வாறு வினியோகம் நிறுத்தப்பட்டால், பள்ளிக்கு எதிர்ப்பார்ப்புடன் வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடனும், வேதனையுடனும் திரும்பிச்சென்றனர். சில பகுதிகளிலுள்ள பள்ளி மாணவர்கள் முற்றுகைப் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், பிரச்னையின் முக்கியத்துவத்தை பொருட்படுத்தாது கல்வித்துறை மவுனம் சாதித்து வருகிறது.அரசு தீர்வு காண வேண்டும்

அரசு பள்ளித்தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: சுயநிதிப்பிரிவு மாணவர்களுக்கு அரசின் நோட்டுப்புத்தகம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களும் தற்போது வரை இம்மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. சுயநிதிப்பரிவு என, கணக்கிடாமல் அம்மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தையும் சேர்த்தே பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை கல்வித்துறையில் சமர்ப்பிக்கிறோம். சில பகுதிகளில், குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அறிவியல் பிரிவில் சேர்ந்து படிக்க இயலாது என்ற எண்ணத்தில்தான், பள்ளி நிர்வாகமே, சுயநிதி பிரிவுகளை ஏற்படுத்தி அம்மாணவர்களின் கல்விக்கு வழிவகுத்து வருகிறது.


தற்போது இதுபோன்ற பிரச்னையால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். கல்வித்துறையிலிருந்தும் அலட்சியமாக பதில் வருகிறதே தவிர, தீர்வுக்கான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. நடப்பாண்டில் வழங்கப்பட வேண்டிய சுயநிதி பிரிவு மாணவர்களுக்கான லேப்-டாப்கள் பள்ளிகளில் உள்ளது. அரசு விரைவில் இதற்கான தீர்வு வழங்க வேண்டும். இவ்வாறு தலைமையாசிரியர் கூறினார்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment