கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கண்டிப்பு



வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


         பெரிய நடிகர் என்பதற்காக அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது என்று சாடியுள்ள அமைச்சர், அரசியல் சுயலாபம் பெற முயலும் தீயசக்திக்கு கமல்ஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''1918-ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை. ஒரே நாளில் 40 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்து, வடகிழக்குப் பருவமழை முழுவதும் பெய்யும் மழையைவிட பலமடங்கு கூடுதலான மழை, ஒருசில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது. இதைத் தெரிந்து கொள்ளாமலேயே கமல்ஹாசன் தனது விதண்டவாதக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.கமல்ஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால்,எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு, எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் அரசு மேற்கொண்டிருக்கும் நிலையில், அரசு நிர்வாகம் செயலற்றுப் போனதாக கமல்ஹாசன் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும். மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது.

மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப்பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் அரசியல் சுயலாபம்பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமல்ஹாசன் விலைபோய்விட்டாரோ என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு தனியாருக்கு அரசு எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் நிவாரண உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாங்களாகவேமுன்வந்து நிதியுதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் ஏற்படும்போது பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப்பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமல்ஹாசன் அறியமாட்டாரா?உதாரணத்துக்கு தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாகத் தெரிவித்து, தனது ட்விட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான்18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான். தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, கமல்ஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை.கமல்ஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்த அரசு மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள்'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Vinoth ss

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment