தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி அரசு அசத்தல் | tnkalvi



தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்யும்முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி
வேலைவாய்ப்பு மையத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 662 இளைஞர்கள் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இவர்களில், பத்தாம் வகுப்பு முடித்து 67 ஆயிரத்து 362 பேரும், பிளஸ் 2 முடித்துவிட்டு 57 ஆயிரத்து 338 பேரும் அடங்குவர். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும்போது, புதுச்சேரி, காரைக்கால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அலைமோதுவது வழக்கம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று, மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிவதால் வேலைவாய்ப்பக அதிகாரிகள் விழி பிதுங்கி நின்றனர். அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள், ஆன்-லைன் பதிவு நடத்தியும் மாணவர்கள் கூட்டம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்திலும் ஆன்-லைன் பதிவு முறை இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான, பூர்வாங்க பணிகளை தொழிலாளர் துணை ஆணையரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனருமான வல்லவன் உத்தரவின் பேரில், வேலைவாய்ப்பு மைய அதிகாரிகள் சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான மென்பொருள் வடிவமைப்பு பணி என்.ஐ.சி., யிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. செயல்படும் விதம் இத்திட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சான்றிதழ் பெற்ற அனைத்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் விபரங்களும் தொகுக்கப்பட்டு, வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் ஆன்-லைனில் அப்லோடு செய்யப்படும். அடுத்த கட்டமாக ஆன்-லைனில் ஒவ்வொரு பள்ளிக்கு தனி பாஸ்வோர்டு உருவாக்கி தரப்படும். ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும். அந்தந்த பள்ளிகளுக்கான பயிற்சி முடித்த பொறுப்பாளர்கள் ஆன்-லைனில் தங்களது பாஸ்வேர்டில் ஓபன் செய்து மாணவர்களின் ஒருங்கிணைந்த சான்றிதழ் எண்ணை தட்டியதும் அந்த பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அனைத்து விபரங்களும், திரையில் தோன்றும். இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றிய விபரங்களை குறிப்பிட்டால் போதும், நொடியில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறியீட்டு எண்ணும் தோன்றிவிடும். அதனை அடுத்த நிமிடமே டவுண்லோடு செய்துவிடலாம். இந்த புதுமையான திட்டம் புதுச்சேரி பிராந்தியத்தில் 254 பள்ளிகளிலும், காரைக்கால் பிராந்தியத்தில் 65 பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் இந்தாண்டு பத்தாம் வகுப்பில் புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்ச்சி பெற்ற 13,921 மாணவர்களும், காரைக்கால் பிராந்தியத்தில் 2,486மாணவர்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்ச்சி பெற்ற 10,605 மாணவர்களும், காரைக்கால் பிராந்தியத்தில் தேர்ச்சி பெற்ற 1028 மாணவர்களும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கால்கடுக்க காத்திருக்காமல் அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பயிற்சி புதுச்சேரி பிராந்தியதில் 258 பள்ளி முதல்வர், தலைமையாசிரியர்களுக்கும், காரைக்காலில் 80 பள்ளி பொறுப்பாளர்களுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கனவே அறிமுக பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. பள்ளிகளில் இறுதி செய்யப்பட்ட பொறுப்பாசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூன் மாத இறுதியில் இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சீனியாரிட்டி எப்படி?

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது எந்த தேதியில் பதிவு செய்கிறோமோ, அந்த தேதியை சீனியாரிட்டியாக எடுத்துக்கொள்வர். ஆனால், பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு முறை அமல் படுத்தப்படும்போது, அசல் மதிப்பெண் மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும் தேதியே சீனியாரிட்டியாக பதிவு செய்து கொள்ளப்படும்.
Share on Google Plus

About vinoth s

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment