இனி செட் மற்றும் நெட் தேர்ச்சி அவசியம் | tnkalvi news

பிஎச்.டி. தகுதி தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்' பிஎச்.டி. தகுதி

தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின் தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதோடு, 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிஎச்.டி. முடித்தவர்கள் "நெட்' அல்லது "செட்' தேர்வு தேர்ச்சி பெறுவது கட்டாயமாகியுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல் 2009-இன் படி, முதுநிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். இருந்தபோதும் ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி.) முடித்தவர்களுக்கு இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், இந்த பிஎச்.டி. படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆராய்ச்சி வழிகாட்டி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்டியாக இருக்க வேண்டும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுவது, மேலும் ஆராய்ச்சி மாணவரின் ஆராய்ச்சி வழிமுறைகளை (தீஸிஸ்) இரு நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும், அதில் ஒரு நிபுணர் வெளி மாநிலத்தவரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கட்டுப்பாடுகளை யுஜிசி 2009 வழிகாட்டுதலில் கட்டாயமாக்கப்பட்டது. 

இந்த நிலையில், பல மாநிலங்களில் யுஜிசி-இன் புதிய வழிகாட்டுதல் படி அல்லாமல் பிஎச்.டி. முடித்தவர்களுக்கு "நெட்', "செட்' தகுதித் தேர்வுகளிலிருந்து விலக்கு அளித்து, உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், அலாகாபாத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தனித் தனியாக வழக்குகள் தொடரப்பட்டன. இதில் முதல் மூன்று உயர் நீதிமன்றங்களும், யுஜிசி 2009 வழிகாட்டுதல் கூறியுள்ளபடி பிஎச்.டி. முடித்தவர்களுக்கு மட்டுமே "நெட்', "செட்' தகுதித் தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்தன. ஆனால், அலாகாபாத் உயர் நீதிமன்றம் இதற்கு மாறான தீர்ப்பை அளித்தது. அதாவது யுஜிசி வழிகாட்டுதல் வெளிவருவதற்கு முன்பு, அதாவது 2009-ஆம் ஆண்டுக்கு முன்பு பிஎச்.டி. முடித்தவர்களுக்கும் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இந்த மாறுபட்ட தீர்ப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை, தில்லி, ராஜஸ்தான் ஆகிய மூன்று உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பே சரி என்று கூறியது. அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்றுள்ளனர். கல்லூரிகளில் கல்வித் தரம் உயரவும், உண்மையான ஆராய்ச்சி மேம்படவும் இந்தத் தீர்ப்பு வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறினர். இதுகுறித்து நெட், செட் சங்க நிறுவனத் தலைவர் எஸ். சுவாமிநாதன் கூறியது: யுஜிசி-இன் 2009 வழிகாட்டுதல் வருவதற்கு முன்பு, ஆராய்ச்சிப் படிப்புக்கு அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. ஒரு பேராசிரியர் எத்தனை ஆராச்சி மாணவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க முடியும். மேலும், தனக்குத் தெரிந்த பேராசிரியர்கள் நிபுணர்கள் மூலம் ஆய்வுக் கட்டுரையை ஆய்வு செய்து சமர்ப்பித்து, பட்டத்தைப் பெற்றுவிட முடியும். இவை அனைத்தும் 2009 வழிகாட்டுதலில் 

கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தரமான ஆராய்ச்சியாளர் உருவாவதற்காக யுஜிசி இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மூலம், கல்வித் தரம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிஎச்.டி. முடித்தவர்கள் "நெட்' அல்லது "செட்' தேர்வு தேர்ச்சி பெறுவது கட்டாயமாகியுள்ளது. இருந்தபோதும், சில பல்கலைக்கழகங்கள் இன்னும் யுஜிசி 2009 வழிகாட்டுதலை நடைமுறைக்கு கொண்டு வராமலே உள்ளன. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 7-9-2011 முதல் தான் இந்த வழிகாட்டுதலை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1-7-2013 முதல் தான் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் மீது யுஜிசி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
Share on Google Plus

About Vinoth ss

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment