கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் - என்ன படிக்கலாம்?

பன்னிரெண்டாம் வகுப்பை முடிக்கும் தருணம், மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை. பல பாதைகள், பல வாய்ப்புகளாகப் பிரியும் சந்திப்பு அது. இனி எந்தப் படிப்பு, எந்த வேலைக்கு வழிவகுக்கும் என்பதைத் தீர்மானிக்கும் கல்விதான் உயர்கல்வி.

விரும்புவதே வாழ்க்கையாக வேண்டும். அப்போதுதான் நிறைவாக உணரமுடியும். அதனால் இத்தருணத்தில் எடுக்கும் முடிவானது, உங்கள் வாழ்வை மட்டுமல்ல நிலைத்த மகிழ்ச்சியையும் நிர்ணயிக்கப் போவதாகும்.


என்ன படிக்கலாம்?

நீங்கள் பள்ளியில் அறிவியல், கணினி, கலை, வணிகம் என எந்த பிரிவை தேர்ந்தெடுத்திருந்தாலும் கல்லூரிக்குள் நுழையும்போது மீண்டும் புதிதாய் சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய மனம் எதை தேர்ந்தெடுக்கிறது எனக் கேளுங்கள்.
பள்ளியில் கலை, வணிக குரூப்களை தேர்ந்தெடுத்தவர்கள் அறிவியல் படிப்புகளை மேல்படிப்பில் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் அறிவியல் படித்தவர்கள் எதையும் தேர்ந்தெடுக்கலாம். ஆகையால் உங்களுடைய பார்வைக்காக இங்கு உயர்கல்வியின் இரண்டு பெரும் பிரிவுகளை சுருக்கமாகப் பார்க்கலாம்.
எந்தக் குறிப்பிட்ட தொழிலுக்காகவும் வடிவமைக்கப்படாததை பொதுக்கல்வி என்றழைக்கிறோம். இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் போன்ற அறிவியல் படிப்புகளும் கணிதம், மேலாண்மை, புள்ளியியல், வணிகவியல், சட்டம், மொழிகள், கவின்கலை, நிகழ்த்துக்கலை, உணவியல், சுற்றுலா, தொல்லியல் ஆய்வு, துணைமருத்துவப் படிப்புகள், ஆசிரியப் படிப்புகள் ஆகியவை இதற்குள் அடக்கம்.
மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டது தொழிற்கல்வி. இவ்வகைப் படிப்புக்கு படிக்கும் காலமும் செலவும் அங்கீகாரமும் கூடுதலாக இருக்கும்.

உங்களையே கேளுங்கள்

உயர்கல்வியைப் பொறுத்தவரை, பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வி இரண்டிலும் உலகின் மாறிவரும் தேவைகள் மற்றும் முன்னேற்றங்களுக்கேற்ப கிளைப் படிப்புகளும், சிறப்புப் பிரிவுகளும் நாள்தோறும் உருவான வண்ணம் உள்ளன. இத்தனை படிப்புகள், பணிகளில் எவற்றை எப்படித் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழலாம். ‘If u ask?’ என்பதிலேயே விடையும் உள்ளது. அதன் பதில் ASK? என்பதுதான்.
ASK-ல் உள்ள முதல் எழுத்து A. A என்றால் APTITUDE என்னும் உங்கள் நாட்டம், ஆர்வம்த்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் எழுத்தாளராகவோ, பேராசிரியராகவோ வரவேண்டுமென்று முடிவெடுத்திருக்கலாம். ஆனால் அந்த நாட்டம் சிலருக்குத் தெளிவாக இல்லாமல் போகலாம். தனக்கு எது தேவை, தன்னுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை அறியாதவர்களாக இருக்கலாம். அத்தகையச் சூழலில் சைக்கோமெட்ரிக் சோதனைகள் கைகொடுக்கும்.
சில துறைகள் மீதுள்ள வெளிச்சமும் ஊடக கவனமும் ஒரு இளைஞரைக் குழப்பலாம். அதனால் அவரது உண்மையான நாட்டம் பற்றிய கணிப்பு தவறிப்போகவும் வாய்ப்புண்டு. அத்தகைய தவறுகள் நிகழாமல் இருப்பதில் பெற்றோரின் பங்களிப்பு நிச்சயம் தேவை. தகவல் நூல்கள், ஆலோசனைகள், கல்வியாளர்களின் உதவியுடன் பிள்ளைகள் தெளிவாக முடிவெடுக்க அவர்கள் உதவ வேண்டும். அதேநேரம் விருப்பங்களை குழந்தைகள் மீது பெற்றோர் திணித்தல் கூடாது.
அடுத்து வரும் எழுத்து S, SCOPE-ஐக் குறிக்கும். அதாவது உங்கள் நாட்டப்படி தேர்ந்தெடுத்த துறைகளில் பணி உயர்வு, நிறைவான ஊதியம், மேற்படிப்பு வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
K என்பது KNOWLEDGE. பணிக்குத் தேவையான அறிவைப் பெறுவதைக் குறிக்கும். அதாவது சரியான படிப்பையும், கல்வி நிலையங்களையும் தேர்ந்தெடுத்துக் கற்கத் தொடங்க வேண்டும்.

இதுவும் பொறியியல்தான்

இளநிலையில் பொதுவாக பிஇ மற்றும் பிடெக் இரண்டும் நான்கு ஆண்டுப் படிப்புகள். முதுநிலையில் எம்இ, எம்டெக் இரண்டும் இரண்டாண்டுப் படிப்புகள். பொறியியல் இளநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, டிப்ளமோ என்னும் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் நேரடியாக பிஇ மற்றும் பிடெக்-ல் இரண்டாவது ஆண்டில் சேரலாம்.
சில பிரிவுகளுக்கு இந்தச் சேர்க்கை பொருந்தும். அந்த லேட்டரல் என்ட்ரி வசதி தற்போது பிஎஸ்சி படித்தவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாய்ப்பு பிஎஸ்சியில் கணிதத்தைப் பாடமாகப் படித்தவருக்கே பொருந்தும்.
பொறியியல் பட்டயப் படிப்பைப் படித்தவர்கள், பகுதிநேரப் படிப்பாகவும் பிஇ மற்றும் பிடெக் படிக்கலாம்.
வேளாண்மைத் துறையில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் நான்காண்டு இளங்கலைப் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
வேளாண்மை, தோட்டக்கலை, வனவளம், மனையியல், பட்டுப்பூச்சி வளர்ப்பு, வேளாண் தொழில் மேலாண்மை ஆகியவற்றில் பிஎஸ்சி படிப்பு, உயிரித்தொழில்நுட்பம், உயிரித்தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், உணவுப் பதப்படுத்துதல் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகியவற்றில் பிடெக் படிப்பை வழங்குகிறார்கள். மேற்கண்டவற்றில் இறுதி மூன்றில் சேர ஒரு மாணவர் உயிரியலுக்குப் பதிலாகக் கணிதம் பயின்றிருக்கலாம்.


மருத்துவமும் துணைமருத்துவக் கல்வியும்

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பிரபலம். அத்துடன் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி ஆகியவற்றுக்கும் தனித்தனிப் படிப்புகள் உள்ளன. மருந்தாளுகை, இயல்மருத்துவம், தொழில்சார்ந்த பிணி மருத்துவம் ஆகியவற்றுக்கும் பிபார்ம், பிபிடி(பிசியோதெரபி), பிஓடி என்ற பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
செவிலியர் எனப்படும் நர்சிங் பணிக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. பிஎஸ்சி பட்டப்படிப்பின் கீழேயே விபத்து மற்றும் அவசர சிகிச்சை, மருத்துவ உதவியாளர் எனத் தொடங்கி 18 பிரிவுகளில் சிறப்புக் கல்வி அளிக்கப்படுகிறது.
பட்டயப்படிப்பில் நர்ஸிங் உதவியாளர், பல் மருத்துவத் துணைப்பணியாளர் எனத் தொடங்கி ஒன்பது பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது.
கால்நடை மருத்துவத்துக்கான பட்டப் படிப்பு பிவிஎஸ்சி ஐந்தாண்டுகளைக் கொண்டது. அரசு வேலைவாய்ப்புகள் சமீபத்தில் இந்தப் படிப்புக்கு அதிகமாகியுள்ளன. இதுதவிர ஃபுட் புரொடக்ஷன் டெக்னாலஜி, பவுல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி ஆகியவற்றிலும் பிடெக் படிப்புகள் உள்ளன.

சட்டம் படித்தால்

பிளஸ் டூவுக்குப் பிறகு பயிலக்கூடிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பும், பட்டம் பெற்ற பிறகு பயிலும் மூன்றாண்டு சட்டப் படிப்பும் இத்துறையில் உண்டு. எம்எல் என்னும் முதுகலைப் படிப்பும் உண்டு. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன.
வணிக ஜாம்பவான் ஆகலாம்
பிகாம் படிப்பில் பொது, ஆக்சுவேரியல் மேலாண்மை, வங்கி மேலாண்மையும் காப்புரிமையும், கணினிப் பயன்பாடு, -காமர்ஸ் எனத் தொடங்கி 17-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. வணிகவியலைச் சார்ந்த மற்ற முக்கியப் படிப்புகள் சிஏ (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்), ஏசிஎஸ் (அசோசியேட் கம்பெனி செக்ரட்டரி புரோகிராம்), சிஎப்ஏ (சார்ட்டர்ட் பினான்சியல் அனலிஸ்ட்) ஆகியவற்றையும் பிகாம் படிக்கும்போதே இணையாக படிக்கலாம்.
கலை, அறிவியல், பொதுப்பாடங்கள்
வரலாறு, அரசியல், பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ் இலக்கியம் இவற்றோடு சுற்றுலா, இதழியல், கவின்கலை, வரலாறு, தத்துவம், உளவியல், மானுடவியல் என பல பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இதேபோல், பிஎஸ்சி பட்டப்படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிரித்தொழில்நுட்பம், கணிதம், புள்ளியியல், புவியியல், உளவியல், மனையியல் ஆகிய அடிப்படை மற்றும் கிளைப் பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது.
ஊடகத்தில் தடம் பதிக்க
விஷுவல் கம்யூனிகேஷன், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபக்ட்ஸ், பப்ளிக் ரிலேஷன்ஸ், ஈவன்ட் மேனேஜ்மெண்ட், எலெக்ட்ரானிக் மீடியா, பிலிம் அண்ட் டிவி புரொடக்ஷன், மல்டி மீடியா, வெப்டெக் மீடியா மேனேஜ்மெண்ட் முதலிய பல பிரிவுகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகள் உள்ளன.
இனி என்ன? உங்களுக்கு வேண்டியதை உங்களிடமே கேளுங்கள், பிறகு உலகத்தில் தேடுங்கள்.

கட்டுரையாளர்:


முன்னாள் இயக்குநர், நுழைவுத் தேர்வுகள் மற்றும் மாணவர் சேர்க்கை அமைப்பு, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
Share on Google Plus

About Vinoth ss

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment